4 மாணவ–மாணவிகள் இறந்த வழக்கு: கார் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை


4 மாணவ–மாணவிகள் இறந்த வழக்கு: கார் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 1 Dec 2017 4:45 AM IST (Updated: 1 Dec 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

கல்குவாரியில் மூழ்கி 4 மாணவ–மாணவிகள் இறந்த வழக்கில் கார் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராணி, மகள்கள் ஸ்ரீதேவி (வயது 15), சுவேதா (13), மகன் திவ்யபிரகாஷ் (10). ஸ்ரீதேவி 10–ம் வகுப்பும், சுவேதா 8–ம் வகுப்பும், திவ்யபிரகாஷ் 5–ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மனைவி ஹேமலதா. இவர்களின் மகன் ரித்திக் ராகேஷ் (7), 2–ம் வகுப்பு படித்து வந்தார்.

ஹேமலதாவின் உறவினர் வீடு திருத்தணியில் உள்ளது. கடந்த 12–6–2011 அன்று அவர் தன் மகன் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி, அவருடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருத்தணி வந்தார்.

திருத்தணி பெரியார் நகரில் உள்ள கன்னிகோவிலுக்கு அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது ராணி உறவினரான அரக்கோணத்தை சேர்ந்த கார் டிரைவர் திருமால் (36) அங்கு வந்தார். பின்னர் அவர் ஸ்ரீதேவி, சுவேதா, திவ்யபிரகாஷ், ரித்திக் ராகேஷ் ஆகியோருடன் பெரியார் நகரில் உள்ள கல்குவாரியில் தேங்கி இருந்த தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது திருமால் 4 பேருக்கும் நீச்சல் கற்றுத்தருவதாக கூறி ஆழமான இடத்துக்கு அழைத்து சென்றார். சற்று நேரத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீதேவி உள்ளிட்ட 4 பேரும் நீரில் மூழ்கினார்கள். அதை கண்டு அதிர்ச்சியடைந்த திருமால் அவர்களை காப்பாற்ற போராடினார். ஆனாலும் 4 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

இச்சம்பவம் குறித்து திருத்தணி போலீசில் ராணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திருமாலை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமராஜ், குற்றம் நிரூபிக்கப்பட்ட திருமாலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக சவுந்தர்ராஜன் வாதாடினார்.


Next Story