விருத்தாசலம் அருகே வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகியதால் மாணவர்கள் அவதி


விருத்தாசலம் அருகே வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகியதால் மாணவர்கள் அவதி
x
தினத்தந்தி 1 Dec 2017 3:30 AM IST (Updated: 1 Dec 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகியதால் மாணவர்கள் அவதி அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள கவணை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 1963–ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. இதில் தற்போது 50 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வரும் இப்பள்ளிக்கூடத்தை முறையாக பராமரிக்கவில்லை.

இதனால் ஓடுகள் உடைந்து காணப்படுகிறது. மழை பெய்யும்போதெல்லாம் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் மழைநீர் ஒழுகுவதால் சுவர்களும் பெயர்ந்து, எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் கனமழை பெய்ததால் அந்த பள்ளியின் வகுப்பறை முழுவதும் மழைநீர் ஒழுகி தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று காலையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு ஈரமான தரையில் அமர்ந்தனர். இதனால் கல்வி பயில முடியாமல் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பெற்றோர்கள், பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட வேண்டும், அல்லது மாற்ற இடத்தில் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து மாணவர்களும் வகுப்பை புறக்கணித்துவிட்டு வீட்டிற்கு செல்ல தயாரானார்கள். அப்போது ஆசிரியர்கள், தங்களது உயர் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அதிகாரி, பள்ளியின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பள்ளி மாணவர்களை அமர வைத்து வகுப்பு நடத்துமாறு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பேசி அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்று வகுப்புகள் நடத்தினார்கள்.

இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், இந்த பள்ளியின் ஓட்டுக்கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும். இல்லையெனில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். மேலும் விருத்தாசலம் தொடக்கக்கல்வி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story