மகா தீப தரிசனத்துக்கு மலை ஏறும் பக்தர்களுக்கு பே கோபுரம் வழியாக அனுமதி


மகா தீப தரிசனத்துக்கு மலை ஏறும் பக்தர்களுக்கு பே கோபுரம் வழியாக அனுமதி
x
தினத்தந்தி 1 Dec 2017 4:30 AM IST (Updated: 1 Dec 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மகாதீப தரிசனத்துக்கு மலை ஏறும் பக்தர்கள் பே கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் நாளான நாளை (சனிக்கிழமை) அண்ணாமலையார் மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் மலை ஏற சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் நேரத்தில் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நாளை காலை 6 மணிக்கு கிரிவலப் பாதையில் அரசினர் கலை கல்லூரி அருகே ஒரு சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

இந்த அனுமதிச்சீட்டு 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை அமைக்கப்பட்டு அனுமதிச் சீட்டு சிறப்பு கவுண்டரில் வழங்கப்படும். மலை ஏற அனுமதி பெற வரும் பக்தர்கள் அதற்கான அடையாள சான்று ஆதாரங்களை சமர்ப்பித்து அனுமதிச்சீட்டு பெற்று கொள்ளலாம்.

மலை ஏறும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பே கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற வேண்டும். அவர்களுக்கு உரிய காலத்திற்குள் மலை ஏறி, இறங்க வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏறக் கூடாது. மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காலி தண்ணீர் பாட்டில்களை மலையில் இருந்து இறங்கி வரும்போது கொண்டு வர வேண்டும்.

மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.

எனவே மலை ஏற வரும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு மலை ஏறும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story