தாராபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


தாராபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Dec 2017 3:15 AM IST (Updated: 1 Dec 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. என்ஜின் கியாஸ் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அலங்கியம்,

தாராபுரம் கொட்டபுளிபாளையம் சாலையை சேர்ந்தவர் நாகேந்திரன்(வயது 38).இவர் சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக உள்ளார். இவர் நேற்று தாராபுரம் வந்தார்.

பின்னர் தனது பெற்றோரை பார்க்க தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள வேலம்பட்டிக்கு தனது காரில் நேற்று மதியம் 2 மணியளவில் உண்டாரபட்டி பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது காரின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.

உடனே நாகேந்திரன் காரில் இருந்த தனது பைகள் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு இறங்கினார். உடனே என்ஜினுக்கு சென்ற கியாஸ் சிலிண்டர் இணைப்பை துண்டித்தார். பின்னர் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு நிலைய அதிகாரி அரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் கார் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

காரில் இருந்த கியாஸ் சிலிண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார். இந்த திடீர் தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story