சூறாவளி காற்றுடன் விடிய, விடிய கொட்டியது: குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட கனமழை


சூறாவளி காற்றுடன் விடிய, விடிய கொட்டியது: குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட கனமழை
x
தினத்தந்தி 1 Dec 2017 3:45 AM IST (Updated: 1 Dec 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

சூறாவளி காற்றுடன் விடிய, விடிய பெய்த கனமழை குமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. இந்த மழையின் காரணமாக ஒரே நாளில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டு புயல் சின்னமாக மாறி வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் அனைத்துப் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

சூறைக்காற்றுக்கு மின்கம்பங்களும் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. நேரம் செல்லச் செல்ல சூறாவளி காற்றின் வேகம் அதிகரித்தது. காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன. இதனால் நள்ளிரவில் இருந்தே மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கின.

விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் பெருமளவு சாலைகளில் விழுந்து கிடந்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், நாகர்கோவில் நகரிலும் நேற்று காலையில் இருந்தே பஸ் போக்குவரத்து தடைபட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

சாலைகளில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்த்துறையினர், தன்னார்வமாக வந்த இளைஞர்களும் இணைந்து ஈடுபட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் சாலையில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் இறங்கினர்.

சூறைக்காற்று மற்றும் கனமழையைப் பார்த்து அச்சம் அடைந்த மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி– கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் பணிக்கு செல்லவில்லை. பல சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் ஒரு மரம் அரசு பஸ் மீது விழுந்ததால் நாகர்கோவில்– திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் தக்கலை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து பெரும்பாலான கிராமப்புற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் 60 கி.மீ. முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தனர். இதனால் மீனவர்களில் பெரும்பாலானோர் நேற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஏற்கனவே விசைப்படகு மற்றும் வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு முதல் வீசிய பலத்தக்காற்றினால் குமரி மாவட்டம் முழுவதும் கடல் கொந்தளிப்புடன் காட்சி அளித்தது. கன்னியாகுமரி, பள்ளம், குளச்சல், கொட்டில்பாடு, கொல்லங்கோடு, நித்திரவிளை போன்ற பகுதிகளில் பங்கர இரைச்சலுடன் ராட்சத அலைகள் எழும்பின. சில இடங்களில் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழும்பின. மீனவ கிராமங்களில் ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர்.

குமரி மாவட்டத்தில் பலத்த மழைக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கார்த்திகைவடலியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவர் வடக்கு சூரங்குடியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று அதிகாலை மழை பெய்தபோது வீட்டுக்கு முன் இருந்த ஒரு தென்னை மரம் திடீரென கீழே சாய்ந்தது. அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த ராஜேந்திரன் மீது மற்றொரு தென்னை மரம் முறிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதுபோல் பளுகல் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (60) என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டின் மீது ஒரு மரம் விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அலெக்சாண்டர் பரிதாபமாக இறந்தார். மண்டைக்காடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (60) என்பவர் வீட்டுக்கு வெளியே குளித்துக்கொண்டிருந்தபோது அவர் மீது மரம் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பால்கிணற்றான்விளையை சேர்ந்த குமரேசன் என்பவரும் நேற்று மரம் விழுந்து பலியானார். இவ்வாறு மரம் விழுந்து ஒரே நாளில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காற்றினால் செல்போன் கோபுரங்கள் பல இடங்களில் சேதம் அடைந்ததின் காரணமாக தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றுடன் விடிய, விடிய கொட்டிய கனமழை குமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்டுவிட்டது என்று சொல்லும் அளவுக்கு அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.


Next Story