சத்தி அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது மனைவி கண்முன்னே தொழிலாளி பரிதாப சாவு
சத்தி அருகே, நாய் குறுக்கே ஓடியதால் பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி மனைவி கண் முன்னே தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பள்ளத்துமேடு அருகே உள்ள காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாலகுமாரன் (வயது 29). அவருடைய மனைவி அலமேலு (25). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. பாலகுமாரன் சின்னகள்ளிப்பட்டியில் உள்ள ஒரு ஜல்லி கற்கள் அரைக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பாலகுமாரன் மனைவி அலமேலுவை மோட்டார்சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு, டி.என்.பாளையத்தில் இருந்து சின்னகள்ளிப்பட்டிக்கு சென்றுகொண்டு இருந்தார். சத்தி மாரனூர் அருகே சென்றபோது, திடீரென ரோட்டின் குறுக்கே ஒரு நாய் ஓடியது. இதனால் நிலை தடுமாறிய பாலகுமாரன் எதிரே மேட்டூரில் இருந்து சத்தி நோக்கி வந்த அரசு பஸ்சில் மோதினார்.
பஸ்மீது மோதியதில் தூக்கிவீசப்பட்ட பாலகுமாரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மனைவி கண்முன் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்தில் காயமின்றி உயிர்தப்பிய அலமேலு கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், சத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாலகுமாரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.