பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் அறநிலையத்துறை இணை ஆணையர்–முன்னாள் செயல் அதிகாரி கைது
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மாயமானது தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை இணை ஆணையர், கோவிலின் முன்னாள் செயல் அதிகாரி ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். பந்தநல்லூரை சுற்றி உள்ள பல்வேறு கோவில்களுக்கு சொந்தமான பழமையான ஐம்பொன் சிலைகள், பாதுகாப்பு கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பசுபதீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.
கோவில்களில் திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டும் இங்கிருந்து சிலைகள் எடுத்து செல்லப்பட்டு, திருவிழா முடிந்ததும் பழையபடி சிலைகள் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வரப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2013–ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிலைகளை கணக்கெடுத்தனர்.
இதில் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த கீழமணக்குடி விஸ்வநாதர் கோவிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி, தெய்வானை, சந்திரசேகரஅம்மன், ரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோவிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பந்தநல்லூர் போலீசார் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உள்பட 10 பேர் மீது கடந்த ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலின் முன்னாள் செயல் அதிகாரி ராமச்சந்திரன் (வயது63), கோவில் தலைமை எழுத்தர் பந்தநல்லூரை சேர்ந்த ராஜா (37) ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே போலீசாரின் தீவிர விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் திருவாரூர் துருவாசர் சன்னதி தெருவை சேர்ந்த கஜேந்திரன்(56), கோவிலின் முன்னாள் செயல் அதிகாரி நாகை மாவட்டம் திருவாளம்புதூர் தெற்கு தெருவை சேர்ந்த காமராஜ் (46) ஆகியோருக்கு 6 சிலைகள் மாயமானதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணத்தில் இருந்த கஜேந்திரன், காமராஜ் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். இதில் காமராஜ், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் செயல் அதிகாரியாக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட கஜேந்திரன், காமராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கும்பகோணம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இவர்களை வருகிற 7–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து சென்று மத்திய சிறையில் அடைத்தனர்.