பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்
பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ஜீவக்குமார்:– நடப்பாண்டு பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (நேற்று) முடிவடைகிறது. எனவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். பயிர்க்காப்பீடு வழங்கியதில் இப்போதும் சுமுகமான நிலை ஏற்படவில்லை. காப்பீட்டு தொகை செலுத்திய பலருக்கும் பிரீமியம் செலுத்திய ரசீது இருந்தும் இழப்பீடு கிடைக்கவில்லை. பூதலூர் தாலுகா மாரனேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குழு கடன் வழங்கப்படவில்லை. புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் இன்னும் வரவில்லை. பயிர்க்காப்பீடு வழங்குவதில் பூதலூர் தாலுகா ராயந்தூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு இப்போது கடனில் வரவு வைக்கிறார்கள். அவ்வாறு வைக்காமல் காப்பீட்டு தொகை முழுமையாக வழங்க வேண்டும்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்:– மத்திய அரசு வேளாண்மை ஆராய்ச்சி மையங்களுக்கு மூடுவிழா நடத்தப்போவதாக கூறப்படுகிறது. வேளாண்மைத்துறை நலிவடைந்து வரும் நிலையில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களை மூட முயற்சி செய்வதை கைவிட்டுவிட்டு, சீராய்வு செய்து மேம்படுத்த வேண்டும். அம்மையகரம், கழுமங்கலம், கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பிரீமியம்செலுத்திய விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர் காப்பீடு செலுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 18–ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
நசுவினி ஆறு படுக்கை அணை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேனன்:– தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்த 95 ஆயிரத்து 790 விவசாயிகள் பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து தங்களது பங்குத்தொகையாக ரூ.8 கோடியே 76 லட்சத்தை செலுத்தினர். பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் 1 ஆண்டு ஆகியும் காப்பீடுசெய்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீட்டுத்தொகை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வருகிற 7–ந்தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்காவிட்டால் 11–ந்தேதி தஞ்சையில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ஜீவக்குமார் பேசுகையில், பயிர்க்காப்பீடு செய்வதற்கு இன்றுடன் (நேற்று) கடைசி நாள். ஆனால் பூதலூர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ் கொடுக்க மறுப்பதால் விவசாயிகளால் உடனடியாக பயிர்க்காப்பீடு செய்ய முடியவில்லை. எனவே கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றார். இதையடுத்து கலெக்டர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி பயிர்க்காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதன் பேரில் சான்றிதழ் வழங்கப்பட்டதையடுத்து விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்தனர்.
தஞ்சையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து அன்னப்பன்பேட்டை விவசாய சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் அன்னப்பன்பேட்டையில் பகுதியில் இதுவரை பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதே போல் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை கரும்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் கோவிந்தராஜ், கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்கப்படாததை கண்டித்து வெளிநடப்பு செய்தார். இதே போல் ஒரத்தநாடு பகுதி நெய்வாசல் கடைமடை பாசன சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் விவசாயிகள், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படாததை கண்டித்தும், உடனடியாக பெற்றுத்தர வலியுறுத்தியும், குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.