தஞ்சையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


தஞ்சையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 1 Dec 2017 4:00 AM IST (Updated: 1 Dec 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவகல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவகல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் 120 பேர் படித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் அறை முன்பு அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு மனநல டாக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் டாக்டர்கள் சுதாகரன், கிருபாகரன், கவுரிசங்கர் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் அரசு மருத்துவகல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்கள், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வினை மருத்துவ தேர்வு வாரியம் கலந்தாய்விற்கு முன்பு நடத்த வேண்டும்.

மேலும் நேர்காணல் மூலம் 550 முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசுவிதிமுறைகளின்படி இல்லாமல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு புதிதாக பணியமர்த்தப்படுபவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும். ஆனால் தற்போது புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து வகை நேர்காணல் பணியிடங்களை மீண்டும் காலியிடமாக அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வின் போது காட்ட வேண்டும். இந்த கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை அரசு உணர்ந்து இதனை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்துகிறோம்’’என்றனர்.


Next Story