பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வந்து இருந்தனர்.
இவர்களில் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை தலைமையிலும், மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் முன்னிலையிலும் ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசல் அருகில் வந்து திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நனைந்த படியே அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சில விவசாயிகள் குடை பிடித்தபடி நின்றனர்.
தேசிய வங்கிகள் உள்பட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், அரசு வேளாண் பண்ணைகளின் உற்பத்தி செலவு அடிப்படையில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கடனில்லா மானியம் வழங்கவேண்டும், ரவுடிகளை ஏவி கடன் வசூல் செய்யும் வங்கி மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை வருகிற 31–ந்தேதி வரை நீட்டிப்பு செய்யவேண்டும், நீண்டகாலமாக முடக்கி வைக்கப்பட்டு உள்ள அரியாறு, கோரையாறு, குடமுருட்டியாறு, அய்யாறு பெருவெள்ள பாதுகாப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஏரிகளை அழிக்காமல் திருச்சி அரை வட்ட சுற்றுச்சாலை பணியை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.