போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை மூட விடாமல் தடுக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
திருச்சி போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை மூட விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சங்க தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உதுமான் முகைதீன், கலெக்டரின் உதவியாளர் (விவசாயம்) சாந்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் அயிலை சிவசூரியன் பேசும்போது, மத்திய அரசு தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும் நிதி ஆயோக்கின் பரிந்துரைப்படி இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் 103 ஆராய்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க உள்ளதாக செய்தி வந்து உள்ளது. குறைக்கப்பட உள்ள 43 நிறுவனங்களில் திருச்சி மாவட்டம் போதாவூரில் அமைந்து உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் ஒன்றாகும். இந்த மையத்தை மூட விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசும்போது, கூட்டுறவு துறை பதிவாளர் உத்தரவிட்ட பின்னரும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் புதிய கடன் வழங்க மறுத்து வருகிறார். இதற்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும். மணப்பாறை டி.என்.பி.எல். காகித ஆலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் அதனை விவசாயிகளுக்கு பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.
திருவெறும்பூர் அருகில் உள்ள கூத்தைப்பார் பெரிய குளம் 270 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 2,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க தலைவர் வேங்கூர் சுப்பிரமணியன் மனு கொடுத்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் பேசுகையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடி மட்டுமே இருப்பதால் இன்னும் 30 நாட்களுக்கு தடையின்றி தண்ணீர் திறந்து விடுவதற்கு வசதியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து 63 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதாவூர் வாழை ஆராய்ச்சி மையத்தை மூட விடாமல் தடுக்க வேண்டும், என்று பேசினார்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல சங்க துணை செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன், மாயனூரில் இருந்து பிரிந்து வரும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலை முழுமையாக தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும், என்றார். மணப்பாறை பகுதியில் காட்டெருமைகளால் பயிர்கள் நாசப்படுத்தப்படுவதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மானாவாரி மற்றும் இறவை பாசனதாரர்கள் சங்க தலைவர் அப்துல்லா மனு கொடுத்தார்.
கூட்டத்தில் இறுதியாக பேசிய கலெக்டர் ராஜாமணி, ‘திருச்சி மாவட்டத்தில் சென்ற ஆண்டு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 22 ஆயிரத்து 777 விவசாயிகள் 27 ஆயிரத்து 10 ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்து இருந்தனர். இதில் 9 ஆயிரத்து 948 விவசாயிகளுக்கு ரூ.23 கோடியே 91 லட்சம் இழப்பீடு தொகை அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகியவை கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. போதாவூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மூடப்படாது. பெங்களூரு மையத்துடன் இணைந்து செயல்படும்’ என்றார்.