ரவடி வெட்டிக்கொலை: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது 3 தனிப்படை அமைப்பு
ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ராயபுரம்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகரைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார்(வயது 24). ரவுடியான இவர் மீது காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜராகி விட்டு வீட்டுக்கு திரும்பிய விஜயகுமாரை, மண்ணடி தம்பிசெட்டி தெருவில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
கொலை நடந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் விஜயகுமார் ஓடுவதும், கொலையாளிகள் அவரை விரட்டிச்சென்று வெட்டி கொலை செய்யும் காட்சிகளும், பின்னர் அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொலையாளிகள் 6 பேரும் யார் என்பது? அடையாளம் தெரிந்தது. மேலும் முன்விரோதத்தில் ரவுடி விஜயகுமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க பூக்கடை இணை கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ஆனந்த்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
தனிப்படை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.