மராட்டிய மேல்–சபை தேர்தலில் இருமுனை போட்டி


மராட்டிய மேல்–சபை தேர்தலில் இருமுனை போட்டி
x
தினத்தந்தி 1 Dec 2017 5:23 AM IST (Updated: 1 Dec 2017 5:23 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மேல்–சபை தேர்தலில் பா.ஜனதா– காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

மும்பை,

மராட்டிய மேல்–சபை உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்–மந்திரி நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகிய கையோடு, மேல்–சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால், காலியான இடத்துக்கு வருகிற 7–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பாரதீய ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் பிரசாத் லாட்டும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. திலீப் மானேயும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறாததால், இந்த தேர்தலில் பா.ஜனதா– காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் வெற்றி பெற 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

ஏற்கனவே சட்டசபையில் பா.ஜனதாவுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். 63 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சிவசேனாவின் ஆதரவும் அக்கட்சிக்கு இருப்பதால், பா.ஜனதா வேட்பாளர் பிரசாத் லாட்டுக்கு 180–க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், காங்கிரஸ் வேட்பாளர் திலீப் மானேக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறிய அக்கட்சி தலைவர் அசோக் சவான், கண்ணுக்கு புலனாகாத அம்புகள் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற உதவிபுரியும் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் 4 ஆண்டுகள் 10 மாதம் பதவியில் நீடிப்பார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.



Next Story