மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடித்திருக்காது


மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடித்திருக்காது
x
தினத்தந்தி 1 Dec 2017 5:46 AM IST (Updated: 1 Dec 2017 5:46 AM IST)
t-max-icont-min-icon

மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடித்திருக்காது என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரு,

மைசூரு ரெயில் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தை நேற்று கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கட்சி அலுவலகம் அருகே நடந்த காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினரின் மாநாட்டை முதல்–மந்திரி சித்தராமையாவும், மாநில தலைவர் பரமேஸ்வரும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அந்த மாநாட்டில் சித்தராமையா பேசியதாவது:–

நமது நாடு குவெம்பு கூறியது போல, அனைத்து சாதி, மத மக்களும் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இதனை பா.ஜனதாவினர் புரிந்துக் கொள்ள வேண்டும். பா.ஜனதாவினருக்கு ஜனநாயகம், அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் சிறுபான்மையின மக்களை எதிரிகளாக நினைத்து இந்து, இந்துத்துவம் என்று கூறி வருகிறார்கள். இதனால் பா.ஜனதாவினருக்கு நாட்டை ஆளும் தகுதி கிடையாது. மதசார்பற்றவர்கள், சமத்துவம், மனிதாபிமானம் கொண்டவர்கள், அரசியல் சாசனத்தை மதிப்பவர்கள் தான் நாட்டை ஆள தகுதியுடையவர்கள்.

பா.ஜனதாவினர் தான் இந்து, இந்து என்று கூறிவருகிறார்கள். நானும் இந்து தான். இந்து கடவுளை பூஜை செய்யும் நாங்கள் இந்துகள் கிடையாதா?. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பினர் தான் இந்து கடவுள்களை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளார்களா?. நான் இந்துவை எவ்வளவு நேசிக்கின்றேனோ, அதே அளவு சிறுபான்மையினரையும் நேசிக்கிறேன். எல்லா சாதி, மத மக்களையும் ஒன்றிணைக்கும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உள்ளது.

ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பதாக பேசி வருகிறார்கள். ஆனால், அவர்கள் பா.ஜனதாவினருடன் கூட்டணி வைக்க ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். பா.ஜனதாவினர் கர்நாடகத்தில் ஆட்சி அமைத்ததற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் காரணம். பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சி இணையாமல் இருந்திருந்தால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்திருக்காது. நாங்கள் எக்காரணம் கொண்டும் மதவாதிகளுடன் கைகோர்க்க மாட்டோம்.

சிலர், பதவி சுகத்துக்காக மதவாதிகளுடன் இணைந்துள்ளனர். அப்படிபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது. மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இருந்திருந்தால், உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடித்திருக்க முடியாது. அதே நிலை கர்நாடகத்திற்கு வந்துவிடக் கூடாது. மதவாதிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. கர்நாடகத்திற்கு மோடி, அமித்ஷா யார் வந்தாலும், அவர்களின் மந்திர, தந்திரங்கள் எதுவும் நடக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story