அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு


அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
x
தினத்தந்தி 2 Dec 2017 3:45 AM IST (Updated: 1 Dec 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு மேற்குதொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் அதன் துணை ஆறுகள் முக்கிய நீர்ஆதாரமாக உள்ளன.

அந்த ஆறுகள் மூலமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி அணைக்கு நீர் வரத்து ஏற்படுகின்றது. இந்த அணையை நீர்ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

அதன்படி அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றுப்பாசனம் மூலமாகவும், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் அமராவதி அணையை அடிப்படையாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் கடுமையான வறட்சி நிலவியது. இதனால் அணை வறண்டு விவசாய சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் ஏராளமான தென்னை மரங்களும் பட்டுப்போனது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஓரளவு மழை பெய்ததால் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி தீவிரமடைந்தது.

இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்குதொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் ஆதாரமாக விளங்கும் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை அமராவதி அணைக்கு வினாடிக்கு 1,202 கன அடி தண்ணீர் வந்தது. அதன்பின்னர் நீர் வரத்து அதிகரித்து நேற்று காலை வினாடிக்கு 3,315 கன அடியாக உயர்ந்தது. இதனால் நேற்று முன்தினம் காலை 56.27 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 61.09 அடியாக உயர்ந்துள் ளது. இதனால் அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

இதுபோல் பஞ்சலிங்க அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 1.91 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலை 46.59 அடியாக இருந்த திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 48.40 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அமராவதி அணைப்பகுதியில் 31 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இரு அணைகளின் நீர்மட்டமும் கிடு, கிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story