தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும்; வைகோ பேட்டி


தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும்; வைகோ பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2017 5:00 AM IST (Updated: 1 Dec 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

புயல் மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று திருப்பூரில் வைகோ கூறினார்.

திருப்பூர்,

திருப்பூரில் நேற்று நடந்த கட்சி பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

சரக்கு சேவை வரி என்ற அதிரடி அதிர்ச்சி தருகின்ற பிரதமர் நரேந்திர மோடி அரசின் நடவடிக்கையால் தொழில்கள், வணிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பின்னலாடை நகரான திருப்பூரிலும் அதன் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர கோலத்தில் இந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரியை கொண்டு வந்து மீளமுடியாத அளவுக்கு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, மக்களை மீட்கும் வகையில் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.

தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்பொழுது நியூட்ரினோ திட்டம் நிறைவேற்றப்படும் என்று சொல்கிறது. இந்த திட்டம் தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் நிறைவேற்றப்பட்டால் இடுக்கி அணை உடையும். முல்லைப்பெரியாறு அணை உடையும். 5 மாவட்டங்களில் பஞ்சம் ஏற்படும். அதனால் தான் இந்த திட்டத்தை எதிர்த்து, மேதாபட்கரை அழைத்து வந்து ஊர், ஊராக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கு பிறகு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நான் வழக்கு தொடுத்தேன். நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி ஆகியோர் அதற்கு தடையாணை பிறப்பித்தார்கள். 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது, உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேபினட் செயலாளருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு இருக்கிறார். தமிழக அரசு அதற்கு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

தமிழக அரசு முதுகெலும்பு அற்ற நிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு இந்த அரசை வெளிப்படையாக அச்சுறுத்தாமல், அவர்கள் மனதுக்குள் நடுக்கத்தை கொடுத்து தாங்கள் விரும்பியதையெல்லாம் மத்திய அரசு செய்து வருகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் இந்திய அரசுக்கு பொருளாதாரத்தில் பெரும் உயர்வு ஏற்படும். ஆனால் தமிழகம் அழிந்து போகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்கின்ற போது அதை செயல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுப்ரீம் கோர்ட்டு சொன்னபோது 4 நாட்களுக்குள் செயல்படுத்துவோம் என்று சொல்லிவிட்டு, 4–வது நாளில் செயல்படுத்த முடியாது, அதற்கு அதிகாரம் கிடையாது, பாராளுமன்றம் தான் முடிவு செய்யும் என்று மத்திய அரசு சொன்னது. அதன்பிறகு பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவில்லை. தமிழக மக்களின் வாழ்வோடு மத்திய அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதுவரை இலங்கை கடற்படையினர் சுட்டதில் 578 மீனவர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இந்திய கடலோர காவல் கடற்படையினர் துப்பாக்கியால் மீனவர்கள் மீது சுட்டது உண்மை. இந்திய கடற்படை அதிகாரி ஒப்புக்கொண்டார். ஆனால் எங்கிருந்து குண்டு வந்தது தெரியாது என்று ராணுவ மந்திரி பேசுகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடித்த பெரும் சூறைகாற்றால், மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக நிவாரண வேலைகளுக்கு ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், விவசாயிகளுக்கும், வீடு இழந்த மக்களுக்கும் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.

மணல் குவாரிகள் மூலமாக இத்தனை ஆண்டுகளாக சுரண்டி ஆற்று,நதிப்படுகையில் கோடிக்கணக்கில் கொள்ளை நடந்ததன் விளைவாகத்தான் 20 அடி பள்ளத்துக்கு நதிகள் போய்விட்டது. இந்த கட்டத்திலாவது நிறுத்தாவிட்டால் மொத்தமாக நதி அழிந்து போகும் என்பதால் தான் இந்த நடவடிக்கை வந்துள்ளது. மாற்று ஏற்பாடாக வெளிநாட்டில் இருந்து வந்த மணலை இறக்குமதி செய்து வினியோகிப்பதற்கு கூட தடுக்கும் மனநிலையில் தான் தமிழக அரசு செயல்பட்டது. செயற்கை மணல் பல்வேறு வகையில் தயாரிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். நதி ஆதாரங்களை, இயற்கை ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மணல் குவாரிகளை மூடும் உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவை வரவேற்கிறேன்.

தமிழக அரசு புதிதாக குவாரிகளை திறப்போம் என்று சொன்னபோது, மணல் விலை சந்தையில் ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டது. நதிப்படுகைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக கேரளாவில் நதிப்படுகையில் மணல் அள்ள முடியாது. ஆனால் தமிழகத்தில் இருந்து மணலை வாங்கி அங்கு கட்டிடம் கட்டுகிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை தமிழக அரசு தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீட்டுக்கு செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story