பொதுமக்கள் விரட்டி சென்ற போது கிணற்றில் தவறி விழுந்த 2 கொள்ளையர்கள்
திருவோணம் அருகே வீட்டில் திருட முயன்ற போது பொதுமக்கள் விரட்டி சென்றதால் 2 கொள்ளையர்கள் கிணற்றில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவோணம்,
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள அனந்தகோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டமூர்த்தி. இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் 2 கொள்ளையர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து செல்போன்–பணம் ஆகியவற்றை திருடி உள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள முருகேசன் என்பவர் வீட்டில் திருட சென்ற போது நாய் குரைத்ததால், முருகேசன் எழுந்து பார்த்துள்ளார். வீட்டுக்குள் 2 பேர் நிற்பதை பார்த்து திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளார்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் கொள்ளையர்கள் முருகேசன் வீட்டில் இருந்து தப்பியோடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். தப்பியோடிய கொள்ளையர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தனர். தண்ணீரில் தத்தளித்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து திருவோணம் போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டித்துரை(வயது38), செல்லத்துரை(35) என்பதும் இவர்கள் 2 பேரும் அந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடு மற்றும் நகை–பணத்தை திருடி வந்ததும் தெரியவந்தது.
மேலும், செல்லத்துரை கடந்த 5 மாதத்திற்கு முன்பு தனது மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.