பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள் 2–வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை மருத்துவ மாணவர்கள் கொட்டும் மழையில் ஊர்வலமாக சென்றனர்.
தஞ்சாவூர்,
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 556 முதுநிலை மருத்துவ காலிப்பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டன. இதற்கான முதல்கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவகல்லூரிகளில் பயின்றவர்களே அழைக்கப்பட்டதாகவும், விதிகளை மீறி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருப்பதாகவும், அரசு மருத்துவகல்லூரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்களை கொண்டே முதுநிலை மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை மருத்துவகல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2–வது நாளாக நேற்று தஞ்சை மருத்துவகல்லூரி முதல்வர் அறை அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனை 2–வது கேட் வழியாக சாலைக்கு சென்று 4–வது கேட் வழியாக மீண்டும் பந்தலை வந்தடைந்தனர். அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பலர் நனைந்து கொண்டும், சிலர் குடைகளை பிடித்தபடியும் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முதுகலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருபாகரன் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் பிரபு, ராஜேஷ், சுதாகரன், கவுரிசங்கர் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூறும்போது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவகல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்கள், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வினை மருத்துவ தேர்வு வாரியம் கலந்தாய்விற்கு முன்பு நடத்த வேண்டும். எந்தவித எழுத்துத்தேர்வும் இல்லாமல் நேரடி நியமனம் மூலம் சட்டவிதிகளை மீறி 556 டாக்டர்கள் அரசு மருத்துவகல்லூரிகளிலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக அரசு பணியில் உள்ள கிராமங்களில் பணிபுரிந்து பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. நடைபெற்ற கலந்தாய்விலும் கூட இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. கலந்தாய்வில் வெளிப்படை தன்மை இல்லை. மருத்துவகல்லூரிகளில் நேரடி பணி நியமனம் செய்யக்கூடாது என உள்ள அரசாணை 131–யை பின்பற்றவில்லை. மருத்துவகல்லூரி தொடர்பான கலந்தாய்வுகளில் அரசு டாக்டர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் உதவி பேராசிரியர்களின் பணி உயர்வு நேர்காணல் கலந்தாய்வு மூலம் மறுக்கப்படுகிறது. இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.