இலங்கை தமிழர்களிடம் மோசடி: தப்பிக்க கையை அறுத்துக்கொண்டு மாடியில் இருந்து கீழே குதித்த பெண்
இலங்கை தமிழர்களிடம் ரூ.4½ கோடி மோசடி செய்து விட்டு தப்பிப்பதற்காக கத்தியால் கையை அறுத்துக் கொண்டு மாடியில் இருந்து குதித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேவூர்,
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள வட்டமலை எதிர்மேடு பகுதியில் இலங்கை தமிழரான ரமணி (வயது62) என்ற பெண் தனது மகள் தீர்கவியுடன் வசித்து வருகிறார். தீர்கவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படிக்கிறார்.
நேற்று மதியம் இலங்கை முல்லைத்தீவு மாங்குடி பகுதியை சேர்ந்த ஜான்சன் (42), தனலட்சுமி (32) ஆகிய இருவரும் ரமணியை பார்க்க வந்தனர். அவர்கள் வந்ததை பக்கத்து வீட்டுக்காரர் மூலமாக அறிந்த ரமணி, வீட்டுக்கதவை உள்புறமாக தாழிட்டுக் கொண்டு 2–வது மாடிக்கு சென்று விட்டார். இந்தநிலையில் கீழே நின்ற ஜான்சனும், தனலட்சுமியும் கீழே வருமாறு ரமணியை அழைத்தனர். அதற்கு ரமணி கீழே வர மறுத்தார். எனவே, ஜான்சன் மேலே ஏற முயன்றார். இந்தநிலையில் ரமணி திடீரென கத்தியால் கையை அறுத்துக் கொண்டு 2–வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் ரமணி பலத்த காயம் அடைந்தார். எனவே, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆட்டோவை அழைத்து உள்ளனர். ஆட்டோ டிரைவர் அவர்களிடம் என்ன விவரம்? என்று கேட்டுள்ளார். அப்போது ரமணி இலங்கையில் இருந்து பணத்தை மோசடி செய்து விட்டு இங்கு வந்து விட்டார் என்றும், பணத்தை கேட்டு வந்த இடத்தில் இது போல் ஆகி விட்டதாகவும் ஜான்சனும், தனலட்சுமியும் கூறி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரமணி, ஜான்சன், தனலட்சுமி ஆகிய 3 பேரையும் டிரைவர் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லாமல், குமாரபாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விட்டார். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சம்பவம் நடந்த இடம் தேவூர் போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால் அங்குள்ள போலீசாருக்கு குமாரபாளையம் போலீசார் தகவல் கொடுத்தனர். மேலும் ரமணி குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி ஜான்சனும், தனலட்சுமியும் தேவூர் போலீசாரிடம் புகார் செய்தனர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் போர் தீவிரமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கை, கால்கள் மற்றும் உயிரை இழந்தனர். இந்த போரால் பாதிக்கப்பட்டவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் கனடா நாட்டிற்கு அனுப்பி வைக்க தனியார் தொண்டு நிறுவனம் முயற்சி எடுத்தது. இதற்கு பலர் ஏஜெண்டுகளாக இருந்தனர். அதில் இந்த ரமணியும் ஒருவர். இவர் கனடா நாட்டிற்கு மாற்றுத்திறனாளிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் அழைத்து செல்வதற்காக அவர்களிடம் முடிந்த அளவு பணம் பெற்றுத்தருமாறு எங்களிடம் கூறினார். இதை நம்பி நாங்களும் நபர் ஒருவருக்கு ரூ.10 அயிரம், 20 ஆயிரம் என பலரிடம் பணம் பெற்று சுமார் ரூ.4½ கோடி வரை ரமணியிடம் கொடுத்தோம். ஆனால் அந்த பணத்தை ரமணி மோசடி செய்து விட்டு இங்கு ஓடி வந்து விட்டார். நாங்கள் ரமணி குறித்து தொடர்ந்து விசாரித்து இங்கு இருப்பதாக தகவல் அறிந்து நேரில் பார்க்க வந்தோம். அவர் எங்களை அடையாளம் கண்டு கொண்டு விட்டு கத்தியால் கையை அறுத்து மாடியில் இருந்து குதித்து தப்பிச்செல்ல முயன்றார். ரமணிக்கு பின்னால் இன்னும் பலர் உள்ளனர். இந்த பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் எல்லோரும் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்தவர்கள், மனைவி, குழந்தைகளை இழந்தவர்கள் ஆவார்கள். எனவே இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். இந்த புகார் தொடர்பாக தேவூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தேவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.