நல்லம்பள்ளி அருகே மாடு திருடிய வாலிபரை கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரி அடி–உதை


நல்லம்பள்ளி அருகே மாடு திருடிய வாலிபரை கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரி அடி–உதை
x
தினத்தந்தி 2 Dec 2017 4:15 AM IST (Updated: 2 Dec 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே மாடு திருடிய வாலிபரை கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரை ஊர்வலமாக போலீஸ் நிலையம் வரை அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏலகிரியான்கொட்டாய் மோட்டுக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் (வயது 47), விவசாயி. இவர் 2 பசுமாடுகள், ஆடுகளை தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு இவரது பசுமாடுகளை திடீரென காணவில்லை. மாயமான மாடுகளை ஊர்பொதுமக்கள் உதவியுடன் கோபால் தேடினார்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமவாசிகள், அதிகாலை ஒரு சரக்கு வாகனத்தில் 2 பசுமாடுகளை மர்மநபர்கள் கிருஷ்ணகிரியை நோக்கி கொண்டுசென்றதாக கோபாலிடம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை கோபால், பொதுமக்களுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தைக்கு சென்றார்.

அங்கு இண்டூரை அடுத்த பொம்மசமுத்திரத்தை சேர்ந்த பிரேம்குமார் (19) மற்றும் 3 பேர், இவருடைய மாடுகளை சந்தையில் விற்க முயன்றுள்ளனர். இதையறிந்த கோபால், அவர்களிடம் சென்று மாடு என்ன விலை எனக்கேட்க அவர்கள், சுமார் ரூ.1 லட்சம் வரை விலை போகும் பசுமாடுகளை, ஒரு மாட்டை ரூ.10 ஆயிரத்துக்கு தருகிறோம் என்று கூறினர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கோபால், மாடு என்ன விலை என்றே தெரியவில்லை. நீங்கள் இந்த மாடுகளை எங்கிருந்து திருடி வந்துள்ளீர்கள் என கேட்டவுடன், அவர்கள் முன்னுக்குபின் முரணாக கூறியுள்ளனர். அப்போது திடீரென பிரேம்குமாருடன் வந்த மற்ற 3 பேரும் சந்தையில் இருந்து திடீரென ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து பிரேம்குமாரை, கோபால் கையும் களவுமாக பிடித்துக்கொண்டார். பின்னர் மாடுகளையும், அதை திருட பயன்படுத்திய வாகனத்தையும் கோபால் மற்றும் பொதுமக்கள் ஏலகிரியான்கொட்டாய்க்கு கொண்டுசென்றனர். பிறகு பிரேம்குமாரை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து, உதைத்து மற்ற 3 பேரின் விபரங்களை கேட்டனர். ஆனால் அவர் கூறமறுத்ததால், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு தர்ம அடிவிழுந்தது.

இந்த தகவல் காட்டுத்தீபோல பரவியதால், இதையறிந்த அதியமான்கோட்டை போலீசார் பிரேம்குமாரை, போலீஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்ல அங்கு வந்தனர். ஆனால் மற்ற 3 பேரின் விவரங்களை கூறும்வரை அவரை விடமாட்டோம் என பொதுமக்கள் பிரேம்குமாரை விடமறுத்ததோடு, போலீசாரை முற்றுகையிட்டும், போலீஸ் வாகனத்தை வழிமறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, “அதியமான்கோட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் ஆடுகள், மாடுகள் தொடர் திருட்டாக இருந்து வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது இல்லை. தற்போது பிடிபட்டுள்ள திருடனை வைத்தாவது இதுவரை எங்கள் பகுதிகளில் திருட்டுபோன மாடு, ஆடுகளை மீட்க முயற்சி செய்யுங்கள்“ என கூறினர்.

இதையடுத்து சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, பொதுமக்கள் பிரேம்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸ் வேனில் அழைத்துச்செல்ல வேண்டாம், ஊர் பொதுமக்கள் திருடனை அறிந்துகொள்ளும் வகையில், எங்கள் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லுங்கள் என பொதுமக்கள் கூறியதோடு, போலீஸ் வாகனங்கள் முன்பு பெரிய கற்களையும் அவர்கள் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பிரேம்குமார் ஊர்வலமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து விவசாயி கோபால் கொடுத்த புகாரின்பேரில், பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் தர்மபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்த ரவி மகன் அய்யப்பன் (21) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவான சரக்கு வாகன உரிமையாளர் தர்மபுரி டேக்கிஸ்பேட்டையை சேர்ந்த கோவிந்தன் மகன் சேகர் (23), தர்மபுரி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (19) ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதில் சேகர் இந்த கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story