குறைந்த விலை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை நாராயணசாமி உறுதி


குறைந்த விலை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 2 Dec 2017 5:00 AM IST (Updated: 2 Dec 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அரசுத் துறைகள் மூலம் குறைந்த விலை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி அரசு ஆஸ்பத்திரியின் கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் ஜெயந்தி வரவேற்றுப் பேசினார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இதையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. எய்ட்ஸ் நோயை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் எய்ட்ஸ் நோயால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெண்கள்தான் அதிகம். எனவே இதுதொடர்பான விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இது நகரப் பகுதியைவிட கிராமப்புற பகுதிக்கு மிகவும் அவசியமாகும். எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு அவசியமாகும். இதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். நமது மாநிலத்தில் அனைத்து தரப்பினருக்கும் இலவச மருத்துவம் அளித்து வருகிறோம். டெங்கு காய்ச்சலுக்குக்கூட விழிப்புடன் மருத்துவம் செய்தோம். புதுச்சேரி மக்களைவிட தமிழக பகுதிகளை சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் நமது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும்போது சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் ஆத்திரத்தில் ஆஸ்பத்திரியை சூறையாடி டாக்டர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனை தடுப்பதற்கான சட்டம் இயற்ற சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தோம். அது தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

எனவே அதனை நிலைக்குழுவுக்கு அனுப்பி உள்ளோம். நிலைக்குழு பரிந்துரை வந்த பின்னர் அதனை நிறைவேற்றுவோம். புதுவையில் 540 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தில் பணிபுரியும் ஊழியர்களை படிப்படியாக சுகாதாரத்துறை ஊழியர்களாக அங்கீகரிக்க அமைச்சரவையில் பேசி உள்ளோம். மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்க சமீபத்தில் சாரம் பகுதியில் அமுதசுரபி மூலம் மருந்தகம் திறந்தோம்.

இங்கு 40 முதல் 60 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இதுபோன்ற மருந்தகங்களை அரசுத்துறைகள் மூலம் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறக்க உள்ளோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.


Next Story