வாலிபர்களிடம் ரூ.68 லட்சம் சுருட்டிய 3 பேர் கைது
ஐ.பி.எல். போட்டியில் வாய்ப்பு தருவதாக கூறி வாலிபர்களிடம் ரூ.68 லட்சம் சுருட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
தனியார் விளையாட்டு கிளப்பை சேர்ந்த 3 பேர் என்னை அணுகி, தங்களை ஐ.பி.எல். ஐதராபாத் கிரிக்கெட் அணிக்கான அதிகாரப்பூர்வ தேர்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும், என்னிடம் பயிற்சி பெற்று வரும் வாலிபர்களுக்கு, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு தருவதாக கூறினர்.
இதனால், அந்த வாலிபர்கள் பல்வேறு தருணங்களில் ரூ.68 லட்சம் வரை அவர்களிடம் செலுத்தினர். எனினும், அணியில் இடம் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. அவர்கள் மோசடி ஆசாமிகள் என்பது பின்னரே தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட விஜய் (40), ஜீவன் (25) மற்றும் தினேஷ் (26) ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 4–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிபதி உத்தரவிட்டார்.