பெண் என்ஜினீயரிடம் ரெயிலில் நகை பறிக்க முயன்ற வாலிபரை கட்டி வைத்து அடி, உதை
ஓடும் ரெயிலில் பெண் என்ஜினீயரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பயணிகள் ரெயிலிலேயே கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
ஜோலார்பேட்டை,
நாமக்கல்லை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் என்ஜினீயராவார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. வேலை தொடர்பாக இருவரும் சென்னை செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்திருந்தனர். சென்னை செல்வதற்காக மகளுடன் குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் ரெயில் நிலையம் வந்தார்.
அங்கு வந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். ரெயில் அதிகாலை 3 மணியளவில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை கடந்து ஜோலார்பேட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் திடீரென குமாரின் மகள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர் தங்கச்சங்கிலியை பறிக்க விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு ‘திருடன்’... ‘திருடன்’... என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்ட சக பயணிகள் அனைவரும் எழுந்து அந்த வாலிபரை மடக்கினர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற அந்த வாலிபரை பயணிகள் பிடித்து ரெயில் பெட்டியின் ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ரெயில் டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலம் கண்ணாஞ்சி பகுதியை சேர்ந்த பிரபில் குமார் ராபிட் (வயது 24) என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ரெயில் காட்பாடி வந்ததும் பிரபில் குமார் ராபிட்டை காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் டிக்கெட் பரிசோதகர் ஒப்படைத்தார். குமாரின் மகள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதால் அவர் அது குறித்து புகார் எதுவும் செய்யவில்லை. எனினும் ரெயிலில் கொள்ளையில் ஈடுபட்டு பிடிபட்ட பிரபாஷிடம போலீசார் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் என்ற காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘பிரபில் குமார் ராபிட் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது. எனவே அவரை திருப்பத்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம்’’ என்றனர்.