திருப்பூரில் வருகிற 10–ந்தேதி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம்


திருப்பூரில் வருகிற 10–ந்தேதி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2017 4:15 AM IST (Updated: 3 Dec 2017 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வருகிற 10–ந்தேதி ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பின் செயல்விளக்க கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

ஜாக்டோ–ஜியோ–கிராப் கூட்டமைப்புகளின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்லடம் ரோடு கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று உறுப்பினர் சந்திப்பு மற்றும் செயல்விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் ரோசன்ராஜ் தலைமை தாங்கினார்.

தமிழக காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

கடந்த 2003–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6–வது ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்த பின்னர், திருத்திய ஊதிய மாற்றத்தை செய்ய வேண்டும். தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு நிலுவை தொகையை 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணப்பயனாக வழங்க வேண்டும்.

மத்திய அரசின் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளில் மத்திய அரசு அலுவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் அறிவித்தது போல தமிழக அரசு அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த தீர்மானங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 10–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story