கடலூர் தேவனாம்பட்டினத்தில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


கடலூர் தேவனாம்பட்டினத்தில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2017 2:45 AM IST (Updated: 3 Dec 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் தேவனாம்பட்டினத்தில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வரதட்சணை கொடுமையா? என்பது குறித்து சப்–கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமிகுடியிருப்பை சேர்ந்தவர் கதிரவன் மகன் சுமன்(வயது 28). மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி அனிதா (26). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது.

திருமணமான பிறகு கணவன்–மனைவி இருவரும் புது வாழ்க்கையை இனிமையாக தொடங்கினர். ஆனால் அவ்வப்போது வரதட்சணை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று சுமனின் வீடு பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர், சுமனின் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, வீட்டின் முன்பக்க ஜன்னல் வழியாக அந்த நபர் பார்த்த போது, சுமனும், அனிதாவும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், சுமன் மற்றும் அனிதாவின் பெற்றோர், உறவினர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுமன், அனிதா ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் புதுமண தம்பதிக்கு திருமணம் ஆகி 8 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து கடலூர் சப்–கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, திருமணமான நாள் முதல் சுமனின் தாயார் வரதட்சணை கேட்டு அனிதாவை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்ற அனிதா நேற்று முன்தினம் கணவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் நேற்று காலையில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து மனமுடைந்த புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சப்–கலெக்டர் விசாரணைக்கு பிறகே முழு உண்மையும் தெரியவரும் என்றார்.


Next Story