பெரம்பூர் ரெயில் நிலையம்-மாதவரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்


பெரம்பூர் ரெயில் நிலையம்-மாதவரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 3 Dec 2017 4:00 AM IST (Updated: 3 Dec 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூர் ரெயில் நிலையம் மற்றும் மாதவரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள 10-க்கும் மேற்பட்ட பெரிய ஓட்டல்களில் வாகனங்களை நிறுத்தும் இடவசதி இல்லை. இதனால் அந்த ஓட்டல்கள் மற்றும் அருகில் உள்ள கடைகளுக்கு வரும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

ரெயில் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர்களும், ஆட்டோக்களை நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரெயில் நிலையம் வந்து செல்லும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருவதுடன், அடிக்கடி அந்த பகுதியில் விபத்துகளும் ஏற்படுகிறது.

இதேபோல் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள், ஓட்டல்களுக்கு முன்பும் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதுடன், பிரியாணி கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து அடுப்பு, சிலிண்டர் உள்ளிட்டவைகளை வைத்து உள்ளனர்.

மேலும் நடைபாதையை ஆக்கிரமித்து பழம், செருப்பு, பூ வியாபாரமும் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள், நடைபாதையை விட்டு கீழே இறங்கி சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

திரு.வி.க. நகர், மூலக்கடை, மாதவரம், மணலி, செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பஸ் மற்றும் வாகனங்களில் சென்னையின் முக்கிய பகுதிகளான புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், ரெயிலில் அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல பெரம்பூர் ரெயில் நிலையம் வரும் பயணிகளும் இந்த மாதவரம் நெடுஞ்சாலையைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டும், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாலும் பெரம்பூர் ரெயில் நிலையம் மற்றும் மாதவரம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பெரம்பூர் மார்க்கெட் மற்றும் ரெயில் நிலையம் வரும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி வாகனங்கள் மற்றும் வாகனங்களில் வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பலமுறை இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும், அடுத்த சில நாட்களில் மீண்டும் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து விடுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story