தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி குஜிலியம்பாறையில் கடையடைப்பு போராட்டம்


தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி குஜிலியம்பாறையில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2017 3:45 AM IST (Updated: 3 Dec 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறையை தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.

குஜிலியம்பாறை,

வேடசந்தூர் தொகுதியில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள லந்தக்கோட்டை, தி.கூடலூர், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், ஆலம்பாடி உள்ளிட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் குஜிலியம்பாறை ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அறிவிக்கக்கோரி இந்த பகுதி மக்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதவிர பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பிலும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் வேடசந்தூர் தாலுகாவை பிரித்து கோவிலூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அறிவிப்பதாகவும், அதற்கான பிர்க்காக்கள் (வருவாய் கிராமங்கள்) பிரிப்பு பணிகள் முழு வீச்சில் முடிவு பெற்று அரசுக்கு கோப்புகளை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி மக்கள், வேடசந்தூர் ஒன்றியத்தில் உள்ள கோவிலூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா பிரிப்பதால் ஒரே ஒன்றியத்தில் 2 தாலுகாக்கள் அமைந்துவிடும் என்று குற்றம் சாட்டினர்.

எனவே இந்த சம்பவத்தை கண்டித்தும், குஜிலியம்பாறை ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அறிவிக்கக்கோரியும், ஒன்றிய தலைநகரத்திலேயே அலுவலகங்களை அமைக்க வலியுறுத்தியும் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கலெக்டர் டி.ஜி.வினயிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று குஜிலியம்பாறையை தனி தாலுகாவாக அறிவிக்கக்கோரி அப்பகுதி மக்கள், வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி குஜிலியம்பாறையில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவது குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சிகள் மற்றும் பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களை ஒன்று திரட்டி விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும், அதேபோல் ஒன்றியம் முழுவதும் உள்ள கடைகளை முழுமையாக அடைத்து போராட்டங்களை தீவிரப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குஜிலியம்பாறையை தலைமையிடாக கொண்டு தனி தாலுகா அறிவிக்கக்கோரி சட்டையில் கருப்பு துணி குத்தியிருந்தனர்.


Next Story