குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரம் மீனவர்கள் கதி என்ன? கப்பல்கள், விமானங்கள் மூலம் தேடும் பணி தீவிரம்
குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தை கடந்த 30–ந் தேதி ‘ஒகி‘ புயல் தாக்கியது. புயல் மற்றும் மழையினால் கடலோர பகுதிகளிலும், உள்மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் விழுந்தன. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி இன்னமும் இருளில் மூழ்கிக்கிடக்கிறது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஒகி புயலால் தற்போது மீனவ மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி? என்னவென்று தெரியவில்லை. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கட்டுமரங்கள், வள்ளங்கள், விசைப்படகுகளில் கடலுக்கு செல்கிறார்கள். விசைப்படகுகளில் செல்லக்கூடிய மீனவர்கள் ஆழ்கடலில் 1 வாரம், 10 நாட்கள், 15 நாட்கள் என தங்கியிருந்து மீன்பிடிப்பது வழக்கம்.
இந்தநிலையில் ‘ஒகி‘ புயல் எச்சரிக்கை அறிவிப்பு வருவதற்கு முன்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகள் மூலமாக ஆழ்கடலுக்கு சென்றுவிட்டனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்களின் கதி என்ன? என்பதும் தெரியவில்லை.
அதே நேரத்தில் வள்ளங்கள், கட்டு மரங்கள் மூலமாக கடலுக்கு சென்ற மீனவர்கள் பலரும் மாயமாகி உள்ளனர். அவர்களை பற்றிய விவரமும் இன்னும் தெரியவில்லை.
இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் அனைத்திலும் பரபரப்பும், பதற்றமும் தொற்றியுள்ளது. மீனவர்களின் குடும்பத்தினர் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருப்பதாக மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் நேற்று மாலையில் குமரி மாவட்டத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிட வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது, “குஜராத் மாநிலம் வரை அரபிக்கடலில் சென்று குமரி மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள். எனவே குஜராத் வரை சென்ற விசைப்படகு மீனவர்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்“ என கூறினார். குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாயமான மீனவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. குமரி மற்றும் கேரள மாநில கடல் பகுதிகளில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடற்படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 5 விமானங்களும், கடலோர காவல்படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானங்களும் மற்றும் 14 ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாதுகாப்பு படையினரின் மீட்பு நடவடிக்கை காரணமாக ஆழ்கடலில் தத்தளித்தபடி இருந்த குமரி, கேரள மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் திருச்சூர் கடற்பகுதியில் கரை சேர்ந்த குளச்சல் பகுதியை சேர்ந்த 60 மீனவர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் பத்திரமாக நேற்றுமுன்தினம் சின்னமுட்டம் துறைமுகத்தில் கரை திரும்பினர். இவர்கள் அனைவரும் வள்ளம், கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஆவர்.
இதேபோல் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியை சேர்ந்த 105 மீனவர்களும் சின்னமுட்டம் துறைமுகத்தில் வந்திறங்கினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், சூறாவளி காற்றில் சிக்கி கடலில் 3 நாட்களாக உணவு ஏதுமின்றி பரிதவித்தோம். பத்திரமாக கரை திரும்பியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது“ என்றனர்.
நேற்று மாலை குளச்சல் பகுதியில் புயல் சேதம் மற்றும் நிவாரணப்பணிகளை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி ஆகியோரை மீனவ மக்கள் முற்றுகையிட்டனர். காணாமல் போன மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதே போல் நித்திரவிளை அருகே சின்னத்துறையில் மீனவ கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாயமான தங்கள் ஊரைச் சேர்ந்த மீனவர்களை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாவட்டம் முழுவதும் சீரமைப்பு பணிகளும், நிவாரணப்பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. சாய்ந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றும் பணிகளும், புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. மின்பாதைகள் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் 29 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடைமைகள் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் மெல்ல, மெல்ல புயல் பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.