என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் முதல்–அமைச்சர் அலுவலகத்தில் ரவுடிகள் தஞ்சம் அடைந்து இருந்தனர் நாராயணசாமி குற்றச்சாட்டு
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்–அமைச்சர் அலுவலகத்தில் ரவுடிகள் தஞ்சம் அடைந்து இருந்தனர் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுனார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் 9 முக்கியமான இடங்களில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது. தவளக்குப்பம், முருங்கப்பாக்கம் பகுதிகளில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு ஏற்கனவே தொடங்கி செயல்பட்டு வருகின்றன.
தற்போது புதுவை காமராஜர் சாலை லெனின் வீதி சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னலை நேற்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார்.
தானியங்கி சிக்னலை இயக்கி வைத்து முதல்– அமைச்சர் நாராயணசாமி பேசும்போது கூறியதாவது:–
மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், வாகனங்களை முறைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விபத்துக்குள் ஏற்படுவது தடுக்கப்படும். இந்த பகுதியில் பழுதாகி இருந்த இருந்த மரத்தை வெட்டுவது வனத்துறையா? பொதுப்பணித்துறையா? என்ற கேள்வி எழுந்து 6 மாத காலமாக வெட்டப்படாமல் இருந்தது. ஏதேனும் ஒரு துறை வெட்ட வேண்டும் என்று கூறியதை அடுத்து அந்த மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டம்–ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொலை, கொள்ளை, வீடு, நிலம் அபகரிப்பு, குழந்தைகள், வியாபாரிகள், தொழில் அதிபர்களை கடத்தி பணம் பறிப்பது என தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதுமட்டுமல்லாமல் ரவுடிகள் எல்லாம் முதல்–அமைச்சர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து இருந்தனர்.
இதனால் சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம்–ஒழுங்கை கட்டுக்குள் வைப்போம். ரவுடிகளின் ராஜ்ஜியத்தை ஒழிப்போம், குண்டர் சட்டத்தில் ரவுடிகளை சிறையில் அடைப்போம். தவறான முறையில் சேர்த்து வைத்துள்ள அவர்களது சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் கொடுப்போம் என வாக்குறுதி அளித்து இருந்தோம். அதை தற்போது நிறைவேற்றி வருகிறோம்.
தற்போது சுமார் 25க்கும் மேற்பட்ட ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2–ம் கட்ட ரவுடிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகள் திருந்தி சகஜ வாழ்க்கைக்கு திரும்பினால் அவர்கள் மீது நடவடிக்கை பாயாது. தொடர்ந்து கொலை, கொள்ளை, நில அபகரிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
இந்தியாவில் உள்ள 17 சிறிய மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு, சிறந்த நிர்வாகம், சுற்றுலா வளர்ச்சி என புதுச்சேரிக்கு 3 பரிசுகள் கிடைத்துள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அதற்கு சில முட்டுக்கட்டைகள் உள்ளன. அதனை படிப்படியாக தகர்த்து வருகிறோம். நிறைய தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். பிள்ளைகளுக்கு தரமான கல்வி, மக்களுக்கு தரமான மருத்துவம், பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இதுதான் அரசின் முக்கிய குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.