வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் அதிகாரி ஆய்வு


வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 3 Dec 2017 3:59 AM IST (Updated: 3 Dec 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரில் தொடங்கி மண்ணிவாக்கம், வரதராஜபுரம் பகுதி வழியாக செல்லும் அடையாறு ஆற்றின் கால்வாய்கள் மற்றும் அதனுடைய கிளை கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால் மழை பெய்யும் போது வரதராஜபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனையடுத்து வரதராஜபுரம் பகுதியில் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 186 வீடுகளுக்கு வருவாய்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

அதன் பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வரதராஜபுரத்தில் கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதே போல 2 வாரங்களுக்கு முன்பு மண்ணிவாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள அஷ்டலட்சமி நகர், மகாலட்சுமி நகர், ஸ்ரீராம் நகர், புவனேஸ்வரி நகர், மற்றும் மண்ணிவாக்கம் அண்ணா நகர் போன்ற பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தை காஞ்சீபுரம் மாவட்ட வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அதிகாரி அமுதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினர். மேலும் இடிக்கப்பட உள்ள இடங்களையும் அவர் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரிடம் குறைகளை கூறினார்கள். அப்போது வருவாய்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் அவருடன் இருந்தனர்.


Next Story