குஞ்சுக் கோழி.. குவியுது பணம்..


குஞ்சுக் கோழி.. குவியுது பணம்..
x
தினத்தந்தி 3 Dec 2017 12:38 PM IST (Updated: 3 Dec 2017 12:38 PM IST)
t-max-icont-min-icon

பிந்துவுக்கு வயது 49. குஞ்சுக் கோழிகளை வளர்க்கும் இவர், அதன் மூலம் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.

பிந்துவுக்கு வயது 49. குஞ்சுக் கோழிகளை வளர்க்கும் இவர், அதன் மூலம் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். “இது எல்லா பெண்களாலும் செய்யக்கூடிய வேலைதான். கவனமாக செயல்பட்டால் எளிதாக இதில் சம்பாதிக்கலாம்” என்றும் சொல்கிறார்.

இவர் நான்கு ‘ஷெட்’களில் கோழிக் குஞ்சுகளை வளர்க்கிறார். அவைகளில் 2 ஆயிரம் குஞ்சுகள் வளர்கின்றன. குஞ்சுகள் எங்கு பார்த்தாலும் நடந்து சென்று கொண்டே இருப்பது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. பூக்கள் கால் முளைத்து ஊர்ந்து செல்வதுபோல் இருக்கிறது. பிந்துவுக்கும் கோழிக் குஞ்சு களுக்குமான பந்தம் 12 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“நான் முதலில் காடை குஞ்சுகளை வளர்க்கத்தான் நினைத்தேன். ஆனால் அந்த காலகட்டத்தில் காடைகளுக்கும், காடை முட்டைகளுக்கும் அவ்வளவு மவுசு இல்லை. அதனால் எனது முதல் முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். காடை முட்டைகளை பண்ணையில் இருந்து வாங்கி வந்து, விற்பனை செய்யத் தொடங்கினேன். அவை உடலுக்கு மிக நல்லது. விலையும் குறைவு என்று சொல்லிப் பார்த்தேன். அப்போது அதை யாரும் நம்பவில்லை. அதோடு அதனை பாம்பு முட்டை என்று கூறி, வியாபாரத்தை படுக்கவைத்துவிட்டார்கள். தவறான தகவல் மக்களிடம் பரப்பப்பட்டதால் என்னால் ஒரு முட்டையைக்கூட விற்கமுடியவில்லை” என்று தனது தொழிலின் தொடக்க கால நெருக்கடியை சொல்கிறார், பிந்து. இவர் கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்.

பிந்துவின் மகன் சுபின் சிறுவயதில் கோழிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்திருக் கிறான். தாயார் காடை முட்டையை நினைத்து கவலையடைந்துகொண்டிருந்தபோது, அவன்தான் தாயாரிடம் ‘கோழி வளர்க்கலாமே!’ என்று ஆலோசனை கூறியிருக்கிறான்.

“என் மகன் சொன்னதும், முட்டைக்காக கோழி வளர்க்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் பண்ணையில் போய் விசாரித்தபோது கோழிக் குஞ்சுகளை வளர்க்கலாமே என்று ஆலோசனை சொன்னார்கள். அந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கான சான்றிதழ் பெற வேண்டும் என்றார்கள். சான்றிதழ் பெறுவதற்கான பயிற்சிக்காக நானும், என் மகனும் சென்றோம். முழுமையான பயிற்சிகளை பெற்ற பின்பே இந்த தொழிலை தொடங்கினேன்” என்கிறார்.

பிந்துவுக்கு கோழி வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தாலும், பயிற்சியின் போதுதான் அதில் இருக்கும் சிக்கல்கள் அவருக்கு தெரியவந்திருக்கின்றன. முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுகளை வாங்கி வந்து, 45 நாட்கள் அவைகளை வளர்த்து விற்பது இவரது தொழில். வாங்கி வந்த குஞ்சுகளுக்கு பிறந்த ஐந்தாம் நாளில் கண்ணிலும், மூக்கிலும் மருந்து ஊற்றவேண்டும். 14-ம் நாள் தடுப்பூசி போடவேண்டும். 30-ம் நாள் பூச்சிக்கான மருந்தும், 45-ம் நாள் ஊசியும் போடவேண்டும்.

“முதலில் நான் குஞ்சுகளுக்கு ஊசி போடுவதற்கு பயந்தேன். குஞ்சுகளை நான் பிடிக்கும்போது அவை என் கையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும். காலப்போக்கில் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். முதலில் பண்ணை களுக்கு மட்டுமே விற்பனை செய்தேன். பின்பு வெளியாட்களும் வந்து வாங்கத் தொடங்கினார்கள். ஒரு குஞ்சுக்கு 100 ரூபாய் என்ற கணக்கில் அரசு நிர்ணயித்திருக்கும் விலையை அடிப்படையாக வைத்து விற்பனை செய்கிறோம். மாதம் 2 ஆயிரம் கோழிகள் விற்பனையாகின்றன” என்கிறார்.

முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளின் இயல்பான வளர்ச்சிக்கு தாய் கோழியின் அருகாமை மிக அவசியம். அதன் சிறகுக்குள் அவை பதுங்கியிருந்து, தேவையான சூட்டைப் பெறும். அந்த சூடு குஞ்சுகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். பிந்து தனது பண்ணைக்கு பொரித்த உடன் குஞ்சுகளை கொண்டு வந்துவிடுவதால், அவைகளுக்கு செயற்கை சூடு கொடுத்து பராமரிக்கிறார். அதற்காக புரூடர் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி மின்சார பல்ப்களை பயன்படுத்தி சூடு அளிக்கிறார்.

Next Story