ஐம்பது நாட்களில் அழகான வீடு


ஐம்பது நாட்களில் அழகான வீடு
x
தினத்தந்தி 3 Dec 2017 2:31 PM IST (Updated: 3 Dec 2017 2:31 PM IST)
t-max-icont-min-icon

வீடுகள் இன்றி சாலையோரத்தில் வசிப்பவர்கள் மற்றும் குடிசையில் வசிக்கும் ஏழைகள் ஆகியோருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் சேவையில் ஈடுபட்டிருக்கிறார், எம்.எஸ். சுனில்.

வீடுகள் இன்றி சாலையோரத்தில் வசிப்பவர்கள் மற்றும் குடிசையில் வசிக்கும் ஏழைகள் ஆகியோருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் சேவையில் ஈடுபட்டிருக்கிறார், எம்.எஸ். சுனில். 57 வயதான இவர் ஓய்வு பெற்ற பேராசிரியை. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர். கடந்த 11 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கிறார். தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டதால் நேரடி கண்காணிப்பில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். வெளிநாட்டில் வசிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுனிலுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

சுனில் 2006-ம் ஆண்டில் ஏழ்மை நிலையில் இருந்த கல்லூரி மாணவர் ஒருவருடைய குடும்பத்தினருக்கு முதன் முதலில் வீடு கட்டி கொடுத்திருக்கிறார். அப்போதுதான் மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருக்கும் ஏழைகளுக்கு தொடர்ந்து வீடு கட்டிக்கொடுக்கும் எண்ணம் சுனிலுக்கு உருவாகி இருக்கிறது.

‘‘அந்த மாணவர் பாதுகாப்பற்ற குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவருடைய குடும்பத்தினர் இவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் நாட்டுநலப்பணி திட்ட இயக்கத்தில் இருந்ததால் மாணவர்களின் உதவியோடு நிதி திரட்டி, அந்த மாணவனுக்கு வீடு கட்டி கொடுத்தோம். அந்த சமயத்தில் வீடு கட்டி முடிக்க ரூ.60 ஆயிரம்தான் செலவானது. இப்போது ஒரு வீடு கட்டுவதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது’’ என்கிறார்.

சுனிலின் சேவை முயற்சிக்கு பல தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். வீடு கட்டித்தருமாறு ஏழ்மையான நிலையில் இருக்கும் ஏராளமானவர்கள் சுனிலை நாடுவதால் நிதி உதவி போதுமானதாக கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் அவர்களின் உண்மையான குடும்ப நிலவரம் என்ன? அவர்களுடைய இருப்பிடம் வசிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறதா? என்பதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்தபிறகே வீடு கட்டி கொடுப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கிறார். மேலும் அவருடைய பகுதியில் வசிப்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். சுனில் கட்டிக்கொடுக்கும் வீடு 300 முதல் 450 சதுர அடியில் அமைந்திருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு அறைகள் இருக்கும் விதத்தில் கட்டமைக்கப்படுகிறது. 20 முதல் 50 நாட்களுக்குள் கட்டுமான பணியை முடித்துவிடுகிறார்.

சுனில் இப்போது ஆறு வீடுகளை கட்டிக்கொண்டிருக்கிறார். அதற்கு அமெரிக்காவில் வசிப்பவர்கள் நிதி உதவி செய்திருக்கிறார்கள். சுனிலின் கணவரும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

Next Story