நடுக்கடலில் படகு கவிழ்ந்ததால் டீசல் கேன்களை பிடித்து தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
குளச்சல்,
குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். ஒகி புயல் குறித்து அறிந்த அவர்கள் உடனடியாக கரை திரும்ப தொடங்கினர்.
இதில் குளச்சல் பகுதியை சேர்ந்த சைஜூ, மார்த்தூஸ், ஜேசுரத்தினம், நிஜன், அசாம் மாநிலத்தை சேர்ந்த மிண்டோ, போலஸ் ஆகியோர் ஒரு படகில் கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 6 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் படகில் காலியாக இருந்த டீசல் கேன்கள் கடலில் மிதந்து கொண்டிருந்தன. அதை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்தனர்.
அப்போது, அந்த வழியாக பூத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகில் வந்தனர். அவர்கள், கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும் மீட்டு தேங்காய்பட்டணம் கடற்கரைக்கு அழைத்து வந்து கரை சேர்த்தனர். பின்னர், அந்த மீனவர்கள் குளச்சலுக்கு திரும்பினர்.