நம்பியாற்றின் குறுக்கே பாலம் இடிந்து விழுந்ததில் விசாரணை நடந்து வருகிறது கலெக்டர் பேட்டி


நம்பியாற்றின் குறுக்கே பாலம் இடிந்து விழுந்ததில் விசாரணை நடந்து வருகிறது கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2017 3:30 AM IST (Updated: 4 Dec 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

நம்பியாற்றின் குறுக்கே பாலம் இடிந்து விழுந்ததில் விசாரணை நடந்து வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். பல இடங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன. அந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகிறோம்.

தொடர் மழையினால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த 357 பேர்கள் மீட்கப்பட்டு, 8 இடங்களில் தங்க வைத்தோம். வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம். தற்போது தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்து விட்டது.

களக்காடு அருகே உள்ள ஆவரந்தலையில் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் ஒரு ஆண்டில் இடிந்து விட்டது. இதுபற்றி உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணைக்கு பின்னர் குற்றம் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய பாலம் கட்ட பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பெய்த கனமழையால் ராதாபுரம் பகுதியில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நிதி கிடைத்தவுடன் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும்.

கனமழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்து இருந்தோம். தற்போது பெய்த மழையின் காரணமாக அணை திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் பாசனத்துக்காக அணையை திறப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story