கோவில்பட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
கோவில்பட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்பட்டி,
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டி வேலாயுதபுரம் எம்.எஸ்.பி. திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில்பட்டி வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் தேசிய கொடியை ஏற்றினார். கோவில்பட்டி பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் மாநாட்டு ஜோதியை ஏற்றினார். கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
வேலாயுதபுரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் அழகுவேல் நாடார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வேல்முருகேசன், பிச்சைக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு தலைவர் தேன்ராஜா வரவேற்றார். மாநாட்டில் முன்னாள் நகரசபை கவுன்சிலர் மதி, சீதாலட்சுமி, கீதா, உமாசெல்வி, சுகுணா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
மாநாட்டில், காமராஜர், சி.பா.ஆதித்தனார், ராமச்சந்திர ஆதித்தனார், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், சங்கரலிங்கனார், வள்ளிமுத்து, சவுந்தரபாண்டியனார், வெங்கடேஷ் பண்ணையார், கோவில்பட்டி காசி நாடார் உள்ளிட்ட சமுதாய தலைவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டன.
கல்வி மற்றும் விளையாட்டில் தேசிய, மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நாடார் மகாஜன சங்க துணை தலைவர் பிரபாகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் தர்மராஜ் ஆகியோர் சீருடைகள் வழங்கினர்.
மாநாட்டில், கோவில்பட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கடலை மிட்டாய், தீப்பெட்டி போன்ற குடிசை தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும். பனைமர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் பனம் பாலை இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமை இடமாக கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். மதுரை–கன்னியாகுமரி இரட்டை ரெயில் பாதை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு நாடார் சங்க நிறுவன தலைவர் முத்துரமேஷ் நாடார், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க பொருளாளர் சுரேஷ்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஏஞ்சலா, செந்தில்குமார், அம்பிகா வேலுமணி ஆகியோர் பேசினர். மாநாட்டில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.