புன்னக்காயல் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி கலெக்டர் பார்வையிட்டார்


புன்னக்காயல் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 4 Dec 2017 2:30 AM IST (Updated: 4 Dec 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

புன்னக்காயல் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியை கலெக்டர் வெங்கடேஷ் பார்வையிட்டார்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. புன்னக்காயல் 60 வீடு தெரு, 100 வீடு தெரு, மறக்குடி தெரு, தெற்கு தெரு, அந்தோணியார் ஆலய பகுதி, சவேரியார் ஆலய பகுதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அங்குள்ள வளனார் மேல்நிலைப்பள்ளி, திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்த பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று நடந்தது. புனித சவேரியார் ஆலயத்துக்கு கீழ் பகுதியில் உள்ள தூர்ந்து போன ஓடையை பொக்லைன் எந்திரம் மூலம் விரிவுபடுத்தி, அதன் வழியாக தேங்கிய மழைநீர் வெளியேறி கடலில் கலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அந்தோணியார் கோவில் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற அங்கு தற்காலிக வடிகால் அமைக்கப்பட்டது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பார்வையிட்டார். அப்போது அவர், மழைநீர் வடிவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர், மழைநீர் வடிவதை கடற்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டார். மேலும் பள்ளிக்கூடம் மற்றும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தாசில்தார் அழகர், வருவாய் ஆய்வாளர் பொன்செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story