காட்பாடி கழிஞ்சூரில் கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு


காட்பாடி கழிஞ்சூரில் கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Dec 2017 2:15 AM IST (Updated: 4 Dec 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி கழிஞ்சூரில் கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து சரிந்து விழுந்தது. உடனடியாக அதனை மூட மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்.

காட்பாடி,

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 100–க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளது. அதில் கழிஞ்சூர் ஏரியும் நிரம்பி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோடி போனது.

கழிஞ்சூர் ஏரியில் தண்ணீர் உள்ளதால் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி பொது கிணறுகள் பலவற்றில் தண்ணீர் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஏரியின் அருகே அருப்புமேடு பகுதியில் சாலையோரம் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு 60 அடி ஆழம், 30 அடி அகலம் கொண்டதாகும். தற்போது அதில் 53 அடி உயரத்துக்கு தண்ணீர் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4–30 மணி அளவில் கிணற்றின் ஒரு பாதி பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எழுந்து வந்து பார்த்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி 1–வது மண்டல உதவி கமி‌ஷனர் மதிவாணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

கிணற்றில் அருகில் உள்ள பாதையை அப்பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்துவதால் யாராவது கிணற்றுக்குள் விழுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே தற்போது அந்த வழியில் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்கள் பயன்படுத்த அருகிலேயே தற்காலிக மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிணறு ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கவும், கிணற்றை உடனடியாக மூடவும் நடவடிக்கை எடுக்குமாறும் கூறினார்.

தற்போது பொதுமக்கள் அச்சத்தை போக்கும் விதமாக கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கழிவுகள் கொட்டி விரைவில் கிணற்றை மூடி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story