திருமணமான 3 மாதத்தில் பா.ஜனதா கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை
திருப்பதியில் திருமணமான 3 மாதத்தில் பா.ஜனதா கட்சி பிரமுகர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால், திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருமலை,
திருப்பதி பரசாலதெருவைச் சேர்ந்தவர் மணிகுமார். இவருடைய மகன் பார்கவ் (வயது 27), பா.ஜனதா கட்சி பிரமுகர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பரசாலதெரு அருகே உள்ள ஒரு தியேட்டர் சர்க்கிள் பகுதியில் டீக்கடை ஒன்றில் டீ சாப்பிட்டப்படி நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
பின்னர் டீக்கடையில் இருந்து 12.30 மணியளவில் புறப்பட்டு வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் பார்கவ்வை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து கொலையாளிகள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திருப்பதி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்கவ் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பார்கவ் பா.ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது. திருப்பதி அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கிரிபுரம் பகுதியில் பார்கவுக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பா.ஜனதா கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.