ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு வினியோகம் சீமான் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு வினியோகம் செய்யப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருப்பூர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதையே கேட்கிறீர்கள். நாங்களும் போட்டியிடுகிறோம். இயக்குனரும், நடிகருமான அமீர் எனது தம்பி. அவர் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தான் போட்டியிடுவார். இப்போதைக்கு படப்பிடிப்பில் அவர் உள்ளார். 15 நாட்களாக இரவு, பகலாக எங்களுடன் சேர்ந்து வேலை செய்வது சிரமம். அதனால் யோசித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் தடுக்குமா?. தடுப்பார்களா?. அப்படி தடுத்தால் தேர்தல் ஆணையம் நேர்மையாக இயங்குகிறது என்று அர்த்தம். தடுக்கவில்லை. தடுக்கவும் முடியாது. இப்போது பணமாக இல்லாமல் தங்கக்காசாக கொடுக்கிறதாக தகவல் வருகிறது.
ஆர்.கே.நகரில் பலமுனைப்போட்டி நடக்கிறது. ஆனால் ஊடகங்கள் மும்முனைப்போட்டி என்றே சொல்கிறது. நாங்களெல்லாம் போட்டியிடுவது தெரியவில்லையா?. நாங்கள் வேட்பாளராக தெரியவில்லையா?. எந்த அரசியல் கட்சியாவது பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க தயாரா?. அப்படி நின்று வென்று காட்டுமா? வாய்ப்பே இல்லை. மீனவர்கள் விவகாரத்தில் எத்தனை பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.