தமிழக, கேரளாவை சேர்ந்த மீனவர்கள் மேலும் 321 பேர் மராட்டியத்தில் கரை சேர்ந்தனர்


தமிழக, கேரளாவை சேர்ந்த மீனவர்கள் மேலும் 321 பேர் மராட்டியத்தில் கரை சேர்ந்தனர்
x
தினத்தந்தி 4 Dec 2017 3:10 AM IST (Updated: 4 Dec 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான தமிழகம், கேரளா, கர்நாடகத்தை சேர்ந்த மேலும் 321 மீனவர்கள் மராட்டியத்தில் பத்திரமாக கரை சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

வங்கக்கடலில் உருவான ‘ஒகி’ புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கிப்போட்டது. இந்த புயல் கேரளாவையும் புரட்டி எடுத்தது.

இந்த புயலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சின்னத்துறை, பூத்துறை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

‘ஒகி’ புயல் சுழன்றடித்த நிலையில், ஏராளமான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் புயல்-மழையில் நடுக்கடலில் சிக்கி மாயமானார்கள். இந்த நிலையில், மீனவர்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மீனவர்களை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

நேற்றுமுன்தினம் கேரளாவை சேர்ந்த 66 படகுகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 படகுகளுடன் மொத்தம் 952 மீனவர்கள் மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் கரை ஒதுங்கினர்.

இதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் மேலும் பலர் மராட்டியத்தில் கரை ஒதுங்கி உள்ளதாக நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

‘ஒகி’ புயலில் சிக்கி நடுக்கடலில் மேலும் 28 படகுகளில் தவித்த 321 மீனவர்கள் ரத்னகிரி மாவட்டத்தில் பத்திரமாக கரை ஒதுங்கி உள்ளனர். இவர்களில் 23 படகுகளில் வந்தவர்கள் தமிழக மீனவர்கள் ஆவர். மற்ற படகுகளில் வந்த மீனவர்கள் கேரளா மற்றும் கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்.

அவர்கள் வந்த படகுகள் ரத்னகிரியில் உள்ள மிர்யா பந்தர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு, மராட்டிய கடல்சார் வாரியம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளேன். ரத்னகிரி பகுதி அதிகாரிகள் மீனவர்கள் உடனேயே உள்ளனர். மீனவர்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் உணர்வுடன் இருப்பதற்கான வசதிகளை அவர்கள் செய்து கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story