ஆடுகளை குளிப்பாட்டிய போது புழல் ரெட்டை ஏரியில் மூழ்கி 2 வியாபாரிகள் பலி
புழல் ரெட்டை ஏரியில் ஆடுகளை குளிப்பாட்டிய போது, பள்ளத்தில் இறங்கியதால் நீரில் மூழ்கிய ஆடு வியாபாரிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
செங்குன்றம்,
சென்னை வண்ணாரப்பேட்டை முத்தையால்மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் ஆதம்பாஷா. இவருடைய மகன் இம்ரான்(வயது 24). அதே வண்ணாரப்பேட்டை ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் லத்தீப்பாஷா. இவருடைய மகன் அசன்(21). இவர்கள் இருவரும் ஆடு வியாபாரிகள்.
சென்னையை அடுத்த புழல் ரெட்டை ஏரி பகுதியில் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டு சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தையில் ஆடுகளை கொண்டு வந்து விற்பதற்காக இருவரும் ஆடுகளை வாங்க ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு நேற்று முன்தினம் சென்றனர்.
அங்கு 20–க்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி, மினிவேனில் ஏற்றிக்கொண்டு நேற்று காலை புழல் ரெட்டை ஏரி பகுதிக்கு வந்தனர். ரெட்டை ஏரியில் ஆடுகளை இறக்கி ஒவ்வொன்றாக குளிப்பாட்டினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் இருந்த பள்ளத்தில் இறங்கி விட்டனர். இதில் இருவரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், மாதவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி உமாபதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரையும் தேடினர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 2 பேரையும் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஏரியில் மூழ்கிய இம்ரான், அசன் இருவரும் தண்ணீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த புழல் போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.