பையனஹள்ளி கிராமத்தில் 6 ஆடுகளை வேட்டையாடி கொன்ற சிறுத்தை


பையனஹள்ளி கிராமத்தில் 6 ஆடுகளை வேட்டையாடி கொன்ற சிறுத்தை
x
தினத்தந்தி 4 Dec 2017 4:52 AM IST (Updated: 4 Dec 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

பையனஹள்ளி கிராமத்தில் ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து 6 ஆடுகளை, சிறுத்தை ஒன்று வேட்டையாடி கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

கோலார் தங்கவயல்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவிற்கு உட்பட்ட பையனஹள்ளி, எர்ரகொட்டா, சிக்ககாரகாமக்கஹள்ளி ஆகிய கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் இந்த கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை பையனஹள்ளி கிராமத்திற்குள் புகுந்தது. மேலும் அக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராமா என்பவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து, அங்கிருந்த 6 ஆடுகளை அந்த சிறுத்தை வேட்டையாடி கொன்றது. பின்னர் அது வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

நேற்று காலையில் ஆட்டு கொட்டகைக்கு சென்ற வெங்கடராமா, அங்கு ஆடுகள் செத்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆடுகளை அடித்துக்கொன்றது சிறுத்தை தான் என்று அவர்கள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே வனப்பகுதிக்கு சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கொத்தால நாகராஜ் என்பவர் அங்கு சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும் இதுகுறித்து வனத்துறையினரிடம் தெரிவித்தார்.

இதனால் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பையனஹள்ளி, எர்ரகொட்டா, சிக்ககாரகாமக்கஹள்ளி ஆகிய கிராமங்களைச் சுற்றி 3 இரும்பு கூண்டுகளை வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story