சலுகைகளை பெறுவதில் சிக்கல் உண்டானால் மாற்று திறனாளிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம்
மாநில அரசின் சலுகைகளை பெறுவதில் ஏதேனும் சிக்கல் உண்டானால் உடனே அதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கலாம் என்று மந்திரி ரமேஷ் குமார் கூறினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் டவுனில் உள்ள சென்னையா ரங்க மந்திரா கலை அரங்கில் நேற்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சத்தியவதி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுகாதாரத்துறை மந்திரியுமான ரமேஷ் குமார் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளையும், பின்னர் அவர்களுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாற்றுத்திறனாளிகளுக்காக மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசின் சலுகைகளை அவர்கள் உரிய முறையில் பெற்றுக் கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு, சுய தொழில் தொடங்க கடன் உதவி போன்றவற்றையும் மாநில அரசு வழங்கி வருகிறது. அவற்றின் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ, மாநில அரசின் சலுகைகளை பெறுவதில் ஏதேனும் சிக்கல் உண்டானாலோ உடனே அவர்கள் அதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story