செஞ்சியில் 2 வீடுகளில் 39¾ பவுன் நகைகள் கொள்ளை


செஞ்சியில் 2 வீடுகளில் 39¾ பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 4 Dec 2017 5:21 AM IST (Updated: 4 Dec 2017 5:21 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் 2 வீடுகளில் 39¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி,

செஞ்சி என்.ஆர்.பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கவுஸ்பாஷா (வயது 54). இவர் தனது வீட்டின் முன்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும், வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கினார். இதை நோட்ட மிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்தனர். பின்னர் கடை வழியாக வீட்டுக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த மரப்பீரோவை உடைத்து அதில் இருந்த 30¾ பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சம்பத்குமார் என்பவரின் வீட்டுக்குள்ளேயும் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து 9 பவுன் நகை மற்றும் 850 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கவுஸ்பாஷா கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குள் தூங்கியதை நோட்ட மிட்ட மர்மநபர்கள், அவரது கடை வழியாக வீட்டுக்குள் புகுந்து தனது மகளின் திருமணத்துக்காக கவுஸ்பாஷா சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து மர்மநபர்கள் அருகில் உள்ள சம்பத்குமாரின் வீட்டுக்குள்ளேயும் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 2 வீடுகளிலும் கொள்ளை போன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story