சித்தேரியில் தேங்கி நின்ற கழிவுநீரை திறந்து விட்ட பொதுமக்கள்


சித்தேரியில் தேங்கி நின்ற கழிவுநீரை திறந்து விட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Dec 2017 5:23 AM IST (Updated: 4 Dec 2017 5:23 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி சித்தேரியில் தேங்கி நின்ற கழிவுநீரை பொதுமக்கள் திறந்து விட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் சித்தேரி உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கள்ளக்குறிச்சி–சங்கராபுரம் சாலையில் உள்ள பெரிய ஏரி நீர்வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் வரும். இந்த ஏரி மூலம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள 250 ஏக்கர் விளை நிலங்கள் பாச வசதி பெற்று வந்தன. பெரிய ஏரியில் இருந்து சித்தேரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி போனதால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை.

கச்சிராயப்பாளையம் சாலை, சித்தேரி தெரு, வ.உ.சி. நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் வடிகால் கால்வாய்கள் வழியாக சித்தேரிக்கு வருவதாலும், நகர பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் இருந்து தினந்தோறும் வெளியேற்றப்படும் கழிவுகள் கொட்டப்பட்டதாலும் சித்தேரி மாசடைந்து போனது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சித்தேரிக்கு வடிகால் கால்வாய்கள் மூலம் மழைநீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. சித்தேரியில் தேங்கி நின்ற கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்ததால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஏரி பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சித்தேரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலை தூர்வாரி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.காமராஜ், பிரபு எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் பெரிய ஏரியில் இருந்து சித்தேரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் பெரிய ஏரியில் இருந்து சித்தேரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆகவே சித்தேரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, சுத்தம் செய்வது என அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று சித்தேரியில் தேங்கி நின்ற கழிவுநீரை மதகுகள் வழியாக திறந்து விட்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டு, சித்தேரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட இருப்பதால், ஏரியை நம்பி பாசனம் செய்யும் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story