விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 135 பேர் கைது
விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் அள்ளியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 135 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்– எட்டயபுரம் ரோடு சித்தவநாயக்கன்பட்டி வைப்பாற்று படுகையில் தனியார் நிலத்தில் சிலர் நேற்று முன்தினம் காலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 6 அடி ஆழம் வரையிலும் பள்ளம் தோண்டி மணல் அள்ளினர். அவற்றை 5 லாரிகளில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, தனியார் நிலத்தில் மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் ஒரு லாரியை சிறைப்பிடித்து, விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே ஆற்றுப்படுகையில் மணல் அள்ளியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால், இரவில் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்துக்கு சென்று இரவு முழுவதும் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், தாலுகா செயலாளர் புவிராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சரவண கிருஷ்ணன், விவசாய அணி தலைவர் சேதுராமன், கந்தசாமி, நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் சேது, பாண்டியன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நேற்று காலையில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 84 பெண்கள் உள்பட 135 பேரை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன்களில் ஏற்றி, விளாத்திகுளம்– வேம்பார் ரோட்டில் உள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
திருமண மண்டபத்தின் முன்பாக வேன்களில் இருந்து கீழே இறங்கியதும் பொதுமக்கள் அங்கு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் போலீசார் வழங்கிய தண்ணீர், உணவை சாப்பிடாமல், திருமண மண்டபத்தில் சமையல் செய்து சாப்பிட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடவும், புதிய மணல் குவாரிகளை திறக்கவும், ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி, சித்தவநாயக்கன்பட்டியில் தனியார் நிலத்தில் ஆற்று மணலை முறைகேடாக அள்ளி வருகின்றனர். மணல் அள்ளியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுக்கின்றனர். மேலும் மணல் அள்ளியவர்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகார் மனுவையும் திரும்ப பெறச் செய்து உள்ளனர்.
மேலும் மணல் அள்ளியவர்கள் மீது தாசில்தார் புகார் மனு அளித்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்வோம் என்று போலீசார் கூறுகின்றனர். எனவே வைப்பாற்றில் மணல் அள்ளியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யும் வரையிலும் போராட்டத்தை தொடர்வோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.