தூத்துக்குடியில் மீனவர்களின் குடும்பத்தினர் திடீர் சாலை மறியல்


தூத்துக்குடியில் மீனவர்களின் குடும்பத்தினர் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:45 AM IST (Updated: 5 Dec 2017 12:03 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் இருந்து ஒரு விசைப்படகில் 16 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்த ஜோசப் (வயது 60), ரவீந்திரன், ஜெகன், ஜூடு (42), பாரத் (18), கெனிஸ்டன் (48) ஆகியோரும் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, ஒகி புயலில் சிக்கி படகு மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஜெகன் உள்பட 3 பேர் மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்றவர்களை கடலோர காவல்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஜூடு, ரவீந்திரன் ஆகியோர் இறந்ததாக வந்த தகவலின் பேரில், அவர்களின் உறவினர்கள் திருவனந்தபுரத்துக்கு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கேரள போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் முத்து, வனசுந்தர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து இரவு வரை போராட்டம் நீடித்தது. அதே நேரத்தில் மீனவர் பிரதிநிதிகள் சிலர் கலெக்டர் வெங்கடேசை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.


Next Story