குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குளத்துக்கு தண்ணீர் திறக்க கோரி 5 கிராமமக்கள் மனு
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குளத்துக்கு தண்ணீர் திறக்க கோரி 5 கிராமமக்கள், குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உள்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆத்தூர் அருகேயுள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், காந்திபுரம், செல்லம்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, சங்காரெட்டிகோட்டை ஆகிய கிராமங்களில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அந்த பகுதியில் உள்ள சொட்டாங்குளம் குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆனால், இந்த குளத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. இதனால் 5 கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மருதாநதி அணை, குடகனாறு ஆகியவற்றில் இருந்து குளத்துக்கு வரத்து கால்வாய் உள்ளது. எனவே, சொட்டாங்குளத்துக்கு தண்ணீர் திறந்து விட்டு, குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கரிகாலபாண்டியன் ஆதரவாளர்கள் சிலருடன் கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் அளித்த மனுவில், நிலக்கோட்டை ஒன்றியத்தில் நடந்த பல்வேறு பணிகள் மற்றும் சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
தாடிக்கொம்பு அருகேயுள்ள காப்பிளியப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்கள் காலனியில் 200 குடும்பத்தினர் வசிக்கிறோம். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் குடியிருப்பு பகுதிக்கு வழங்கிய நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நூலகம், சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும், என கூறப்பட்டு இருந்தது.
அதேபோல் கணவாய்பட்டியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி கொடுத்த புகாரில், நான் 5 ஏக்கரில் சோளம் பயிரிட்டு இருந்தேன். வறட்சியால் அவை கருகி விட்டன. இதையடுத்து எனக்கு ரூ.14 ஆயிரத்து 400 நிவாரணம் வந்து இருப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் கூறுகின்றனர். ஆனால், கிராம நிர்வாக அதிகாரி ரூ.1,030 மட்டுமே காசோலை வந்திருப்பதாக கூறுகிறார். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
குஜிலியம்பாறை ஒன்றியம் வடுகம்பாடி கிராம மக்கள் கொடுத்த மனுவில், வடுகம்பாடி ஊராட்சி அலுவலகம் புளியம்பட்டியில் செயல்பட்டு வந்தது. தற்போது புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. அதனை வடுகம்பாடி பிரிவில் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர். திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்த பாலமுருகன், ரமேஷ், மனோகரன் ஆகியோரை நள்ளிரவில் விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார், பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக 3 பேரின் உறவினர்கள் மனு கொடுத்தனர்.
பழனி தாலுகா பெத்தநாயக்கன்பட்டியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் கொடுத்த மனுவில், எங்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமாகி விட்டன. இந்த வீடுகளை மராமத்து பார்க்க கடந்த 2013–ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை பணிகள் நடக்கவில்லை. இதனால் சேதமடைந்த வீடுகளில் அச்சத்துடன் வசித்து வருகிறோம். இந்த வீடுகளை மராமத்து செய்ய வேண்டும், என்று கூறியிருந்தனர்.
வடமதுரை அருகேயுள்ள காணப்பாடியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் திட்டத்தில் ஆடுகள் வழங்கும்படி விண்ணப்பம் செய்து இருந்தோம். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள எங்களுக்கு கொடுக்காமல், அரசியல்வாதிகளின் தலையீட்டால் வசதி படைத்தவர்களுக்கு ஆடுகள் வழங்கப்படுகின்றன. எங்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.