‘ஆன்லைன்’ பட்டா மாறுதல் குறைபாடுகளை நீக்க கோரி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


‘ஆன்லைன்’ பட்டா மாறுதல் குறைபாடுகளை நீக்க கோரி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:30 AM IST (Updated: 5 Dec 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

‘ஆன்லைன்’ பட்டா மாறுதல் குறைபாடுகளை நீக்க கோரி திருச்சியில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.

தற்போது நடைமுறையில் இருந்து வரும் ‘ஆன்லைன்’ பட்டா மாறுதலில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும், நில அளவை பணியாளர்கள் அனைவருக்கும் பவானிசாகர் நிர்வாக பயிற்சியினை வழங்கி, களப்பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணப்படி வழங்கவேண்டும், பல மாவட்டங்களில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு தனியாக களப்பணியாளர்களை நியமிக்காமல் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் களப்பணியாளர்களையும், உதவியாளர்களையும் நியமிக்கும் முறையை கைவிடவேண்டும், குறுவட்ட நில அளவர் பணியிடங்களில் தற்போது தகுதி பெற்றுள்ள நில அளவர்களுக்கு அரசிடம் உரிய ஆணையை பெற்று பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் குமாரவேல் பேசினார். தொடக்கத்தில் திருச்சி மாவட்ட தலைவர் ஜோசப் பேட்ரிக் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இருந்து நில அளவர் முதல் ஆய்வாளர் வரை ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பினார்கள்.


Next Story