சென்னை விமானநிலையத்தில் அதிகாரிகளை தாக்கி வாலிபர் ரகளை
கொல்கத்தா செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்த வாலிபர் திடீரென்று பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று மதியம் கொல்கத்தாவிற்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக, கொல்கத்தாவை சேர்ந்த சுபாடேநாத் (வயது 25) என்பவர் தனது மனைவியுடன் வந்தார். சோதனைகளை முடித்துக் கொண்டு விமானத்தில் ஏற அவர், 5–வது நுழைவுவாயில் வழியாக செல்வதற்கு பதிலாக 3–வது நுழைவுவாயில் வழியாக சென்றார்.
இதைப்பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், 3–வது நுழைவுவாயில் வழியாக கோவை விமானத்தில் செல்லும் பயணிகள் செல்ல இருப்பதால் 5–வது நுழைவு வழியாக செல்லுமாறு கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து சுபாடேநாத்துக்கும் பாதுகாப்பு அதிகாரிகளும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுபாடேநாத் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகள் என 6 பேரை தாக்கி ரகளையில் ஈடுபட்டார். உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை சுற்றி வளைத்து பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, சுபாடேநாத்தின் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 15 தினங்களுக்கு முன் அவரை கொல்கத்தாவில் இருந்து வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்த விவரத்தை அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில், சுபாடேநாத் மீது யாரும் புகார் அளிக்கவில்லை.
என்றாலும் மனநிலை பாதிக்கப்பட்ட சுபாடேநாத்தை விமானத்தில் அனுப்ப விமான நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் வேறு வழியின்றி அவரை ரெயிலில் அழைத்துச் செல்லுமாறு அவரது மனைவியிடம் போலீசார் அறிவுறுத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.